இந்தியா

ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய திட்டங்கள்

செய்திப்பிரிவு

ரயில்வே பாதுகாப்பு தொடர்பான முக்கிய திட்டங்கள் சிலவற்றை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று வெளியிட்டார்.

2015 - 16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார்.

அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் உரையில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான வெளியிட்ட அறிவிப்புகள்:

ரயில் பாதைகளில் பாதுகாப்பு எச்சரிக்கை முறை, மோதல் தவிர்ப்பு முறை

* குறிப்பிட்ட ரயில் பாதைகளில் ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை முறை, ரயில்கள் மோதல் தவிர்ப்பு முறைகளை அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனை விரைவில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

* ரயில் பெட்டிகளில் தீ பிடிப்பதைத் தடுக்கவும், விபத்துக்களின்போது ரயில் பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று மோதுவதை தடுக்கவும் புதிய முறைகளை கண்டுபிடிக்குமாறு ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர நிலைகள் அமைப்பிணை கேட்டுக்கொண்டுள்ளது.

* ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குளாகும் சம்பவங்களைத் தடுப்பதற்காக முதன்மை பாதைகளைப் புதுப்பிக்கும் அதேநேரம், கனமான தண்டவாளங்கள் கொண்ட நவீன பாதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறந்த வெல்டிங் தொழில்நுட்பங்களும் ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும், தண்டவாளங்களைச் சோதனை செய்ய அனலாக் இயந்திரங்களுக்கு பதிலாக மிகவும் நம்பகமான டிஜிட்டல் வகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

* பெண் பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய ரயில்வே நிருபயா நிதியை உபயோகிக்கும். பெண் பயணிகள் பாதுகாப்புக்காக அவர்களின் சுயமரியாதை பாதிக்காத வகையில், கண்கானிப்பு கேமராக்கள் குறிப்பிட்ட ரயில் பெட்டிகளிலும் புறநகர் ரயில்களின் பெண்கள் பெட்டிகளிலும் பொறுத்தப்படும்.

பயணிகள் குறைதீர்க்க 138 - 24 மணி நேர உதவி

அனைத்து பயணிகளின் குறைகளைத் தீர்க்கும் '138' என்ற 24 மணி நேர உதவி தொலை பேசி எண் செயல்படுத்தப்படும். ரயில் பயணம் செய்யும்போது, பயணிகளுக்கு ஏதேனும் குறை ஏற்பட்டால் இந்தத் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.

மார்ச் 1, 2015 முதல் வடக்கு ரயில்வேயில் இதனை முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளிடமிருந்து பெறப்படும் ஆலோசனைகளின்படி இது பிற ரயில் நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

பாதுகாப்பு குறித்த குறைகளுக்கு '182' என்ற கட்டணம் இல்லாத தொலை பேசி எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT