கும்பமேளா போன்று கோதாவரி நதியில் இந்த ஆண்டு பிரம்மாண்ட மான முறையில் ‘கோதாவரி புஷ்கராலு’ எனும் புனித நீராடும் நிகழ்ச்சியை நடத்த தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பமேளா போன்று இம்முறை கோதாவரி நதியில் ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநில அரசுகளும் பிரம்மாண்டமான முறையில் விழா நடத்த திட்டமிட்டுள்ளன. இது குறித்து நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் அமைச்சரவை துணை குழு கூட்டம் நடந்தது. பின்னர் ‘புஷ்கராலு’ ஏற்பாடுகள் குறித்து தெலங்கானா மாநில இந்து சமய அறநிலையத்துறை மற்றும் குடியிருப்பு வாரிய அமைச்சர் இந்திரகரண் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள கோதாவரி நதியில் வரும் ஜூன் - ஜூலை மாதத்தில் ‘புஷ்கராலு’ விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோதாவரி பகுதியில் புனித நீராடும் 69 இடங்களில் குளியல் வசதியுடன் கூடிய அறைகள் புதிதாக கட்ட முடிவெடுக்கப் பட்டுள்ளது. மேலும் 27 பழைய குளியல் அறைகளை புதுப்பிக்கும் பணிகளும் தொடங்க உள்ளன.
கும்பமேளா போல நடைபெறும் இந்த ‘புஷ்கராலு’வுக்கு தெலங்கானா, ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் காவல்கட்டுப்பாட்டு அறைகளும் நிறுவப்படு கின்றன.
இந்நிகழ்ச்சிக்காக தெலங்கானா முதல்வர் விரைவில் டெல்லி சென்று மத்திய அரசின் உதவியை கேட்க உள்ளார். மேலும் இவ்விழாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படும். தெலங்கானாவில் உள்ள நிஜாமாபாத், கம்மம், ஆதிலாபாத், வாரங்கல், கரீம்நகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த உயர் அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளது. இதற்காக சாலை மற்றும் கட்டிடத் துறை சார்பில் ரூ.226 கோடி, பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் கிராமிய வளர்ச்சி துறை சார்பில் ரூ.100 கோடி, நீர்வளத்துறை சார்பில் மேலும் ரூ.86 கோடி என மொத்தம் ரூ.452 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் இந்திரகரண் ரெட்டி கூறினார்.