ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக தொடுக்கப்பட்ட சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், ரூ.232 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்க துறையினர் முடக்கி உள்ளனர்.
மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் ஆட்சி காலத்தில், அவரது மகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, சட்ட விரோதமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இவரது பல்வேறு நிறுவனங்களில் மறைமுகமாக முதலீடு செய்த சொத்துகளை அமலாக்க துறையினர் நேற்று முன்தினம் இரவு முடக்கினர். இதன் மதிப்பு ரூ. 232.38 கோடியாகும்.
இதில் இந்தியா சிமெண்ட்ஸ், ஜனனி இன்ஃப்ரோ, கார்மல் ஏசியா, இந்திரா டெலிவிஷன் ஆகிய நிறுவனங்களின் முதலீடுகள், பங்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் விஜயா வங்கி கிளையில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த ரூ.96 கோடி உட்பட மொத்தம் ரூ.232.38 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே இதே வழக்கில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்க துறையினர் முடக்கி, அது தொடர்பாக ஐபிஸ் அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்களிடம் விசாரனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.