பட்ஜெட் உரையை நின்று கொண்டு படித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் அறிவுரையை ஏற்று, இடையே அமர்ந்துகொண்டு உரையைத் தொடர்ந்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு வயது 62. அவர் அவ்வப்போது முதுகு வலியால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதனால் அவர் தனது பட்ஜெட் உரையை வாசித்துக் கொண்டிருந்தபோது, "வேண்டுமானால், நீங்கள் அமர்ந்துகொண்டு படிக்கலாம்" என்று ஜேட்லியிடம் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறினார்.
அதற்கு, "தேவைப்படும்போது நான் அமர்ந்துகொள்கிறேன்" என்று கூறிவிட்டு, உரையைப் படிக்கத் தொடங்கிய அவர் சுமார் அரை மணி நேரம் கழித்து தனது இருக்கையில் அமர்ந்துகொண்டு படிக்கத் தொடங்கினார்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி முதுகுவலியால் கடந்த ஆண்ட பட்ஜெட்டின்போதும், உரையின் இடையே இடைவெளி எடுத்துக்கொண்டார். சிறிய இடைவெளிக்குப் பிறகு மக்களவை கூடியபோது அவர் மீண்டும் தனது உரையைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.