தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக ஆஜராகிவரும் பவானி சிங்கை நீக்கக்கோரும் திமுக மனு மீது வரும் 10-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில், அரசு வழக்கறிஞ ராக ஆஜராகும் பவானி சிங்கை நீக்கக்கோரி, திமுக பொதுச்செய லாளர் க.அன்பழகன் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தார்.
நீடிப்பாரா பவானி சிங்?
இம்மனு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.குமார்,பி.வீரப்பா ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ், “வழக்கு தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறுவதால் கர்நாடக அரசு தான் அரசு வழக்கறிஞரை நிய மிக்க வேண்டும். ஜெயலலிதா வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அரசு வழக்கறிஞரை நிய மித்துள்ளது. இதனால் நீதியை நிலைநாட்டுவதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது. எனவே, பவானி சிங்கின் நியமனம் சட்டத்துக்கு எதிரானது'' என வாதிட்டார்.
இதற்கு பவானி சிங்கின் வழக்கறிஞர் நாகானந்த் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் பேசும்போது, “கர்நாடக அரசு தான் இவ்வழக்குக்கு பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது. மேல்முறையீட்டுக்கு தனி ஆணை வழங்க தேவை யில்லை. இன்னும் 20 நாட்களில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலை யில் புதிய அரசு வழக்கறிஞரை நியமிப்பது தேவையற்றது. உச்ச நீதிமன்றம் கொடுத்த 3 மாத கால அவகாசத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும்''என்றார்.
கர்நாடக அரசுக்கு கண்டனம்
இதையடுத்து கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் பேசும்போது, “பவானி சிங்குக்கு ஊதியம் கொடுப்பது தமிழக லஞ்ச ஒழிப்பு துறைதான். அவரது நியமனத்தில் தவறு இல்லை. மேல்முறையீட்டில் கர் நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழிமுறைகள் வழங்காததால், இதில் கர்நாடக அரசு தலையிட முடியாது'' என தெரிவித்தார்.
இதற்கு நீதிபதி குமார், “இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு தீர்க்கமான அரசாணையை வெளியிடாதது ஏன். உச்ச நீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெறாதது ஏன். கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டால் இந்த பிரச்சினை தீர்ந்து விடுமே?''என கேள்வியெழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட திமுக வழக்கறிஞர் சி.வி.நாகேஷ் மேலும் சில கருத்துகளை தெரிவிக்க அனுமதி கோரினார்.
10-ம் தேதி தீர்ப்பு?
அதற்கு நீதிபதி குமார், “வழக்கை வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன். அன்றைய தினம் மிக சுருக்கமாக வாதிடுங்கள். அன்றே வழக்கின் முடிவை தெரி வித்து விடுகிறோம்'' என்றார்.
இதுவரை திமுக மனுவை 4 வெவ்வேறு அமர்வுகள் விசாரித் துள்ளன. ஆனால் பல்வேறு கார ணங்களால் தொடர்ந்து நிலுவை யில் நீடிக்கிறது. இம்மனு மீது 10-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.