தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்துள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் 35-வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங்,''இவ்வழக்கில் இறுதிவாதம் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும்.அப்போதுதான் நீதிமன்றத்தின் சந்தேகங்களுக்கு உரிய முறையில் என்னால் விளக்கம் அளிக்க முடியும்''என்றார்.
அதற்கு நீதிபதி குமரா சாமி,''இவ்வழக்கை தினமும் விசாரித்து குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊடகங்களும் இவ் வழக்கை தொடர்ந்து கவனித்து வருகின்றன. அதனால் தேவை யற்ற காலதாமதம் செய்ய முடியாது. இன்று காலையில் கூட உள்ளூர் பத்திரிகைகளை படித்தேன். அரசு வழக்கறிஞரிடம் நான்(நீதிபதி) எழுப்பும் அனைத்து கேள்விகளையும், கண்டன தொனியில் எழுப்புவதாக எழுதியுள்ளனர்.
அதற்கு பவானிசிங், “நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நான் விரிவாக பதில் அளிக்கிறேன். ஆனால் எல்லா பத்திரிகைகளும், ‘பவானி சிங்கிற்கு நீதிபதி கண்டனம்' என பெரிய அளவில் செய்தி வெளியிடுகின்றன'' என்றார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் கூட்டாக எழுந்து,'ஊடகங்கள் இவ்வழக்கு குறித்து மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றன' என்றனர்.
இதையடுத்து நீதிபதி,'இங்கு எத்தனை பத்திரிகையாளர்கள் இருக்கிறீர்கள்? நீங்கள் 'பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் விதிமுறைகளை படித்துள்ளீர்களா? செய்திகளில் இலக்கண பிழைகள் இருக்கலாம்.ஆனால் செய்தியை திரித்து வெளியிடக்கூடாது.அனைவரும் பத்திரிகை தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதே நேரத்தில் ஊடகங்களை முழுமையாக புறக்கணிக்கவும் முடியாது'' என்றார்.
மேலும் நீதிபதி பேசும் போது,''கால அவகாசம் வழங்கு வது குறித்து பிறகு பரிசீலிக்கலாம். முதலில் நீங்கள்(பவானிசிங்) சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரிகளாக பணி யாற்றிய நல்லம்ம நாயுடு, லத்திகா சரண், வி.சி.பெருமாள்,கதிரேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தை படியுங் கள்''என்றார்.
இதையடுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்,' நல்லம்ம நாயுடுவின் சுமார் 400 பக்க வாக்குமூலத்தை வாசித்து முடித்தார்.
அதனை தொடர்ந்து ஜெயலலிதா மீது சுப்பிரமணியன் சுவாமி அளித்த சொத்துக்குவிப்பு புகாரை விசாரித்து 18-9-1996 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது தொடர்பாக விசாரணை அதிகாரி வி.சி.பெருமாளின் வாக்குமூலத்தை படித்தார். மேலும் இவ்வழக்கில் உயரதிகாரியாக பணியாற்றிய லத்திகா சரண் மற்றும் கதிரேசனின் சுருக்கமான வாக்குமூலத்தையும் வாசித்து முடித்தார்.
தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பவானிசிங் பேசும்போது,''எனக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும்.அல்லது குறைந்தபட்சம் 5 நாட்களாவது கால அவகாசம் வழங்க வேண்டும்.இல்லாவிடில் எவ்வித தயாரிப்பும் இல்லாமல் விசாரணை நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களையே இங்கும் வாதிட வேண்டிய நிலை ஏற்படும்'என்றார்.
பவானிசிங்கின் கோரிக் கையை ஏற்ற நீதிபதி குமார சாமி,சொத்துக்குவிப்பு வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்தி உத்தரவிட்டார்.