இந்தியா

ரூ.10 லட்சத்துக்கு சூட் அணிவதா?- டெல்லி பிரச்சாரத்தில் மோடி மீது குஷ்பு தாக்கு

செய்திப்பிரிவு

கருப்புப் பணத்தை மீட்டெடுப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ரூ.10 லட்சத்துக்கு சூட் அணிவதா? என டெல்லி பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 7-ல் நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவர தன் பங்குக்கு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்புவும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லி ராஜீந்தர் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரம் யாதவை ஆதரித்து குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழு தலைவர் அஜய் மாக்கன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஆகியோர்கலந்து கொண்டனர்.

பிரச்சாரத்தில் குஷ்பு பேசும்போது, "நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவந்து, அதிலிருந்து சராசரியாக ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் போடப்படும் என கூறியிருந்தார்.

ஆனால், இதுவரை ஒரு ரூபாய்கூட வந்தபாடில்லை. ஆனால், பிரதமர் மோடியோ ரூ.10 லட்சத்திக்கு சூட் அணிந்து கொள்கிறார். அவர் உறுதியளித்த நல்ல நாள் வந்துவிட்டது. ஆனால், அது அவருக்கு மட்டுமே" என பேசினார்.

கடந்த தேர்தல் குறித்து அவர் பேசுகையில், "காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை நான் மறுக்கவில்லை. அதற்கு தண்டனையாகத் தான் மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தனர். அதேவேளையில் டெல்லியில் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி மக்கள் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும்" என கூறினார்.

ராஜீந்தர் நகர் தொகுதியில் தமிழர்கள், கன்னட மக்கள் அதிகம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT