ஜம்மு-காஷ்மீரில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இறுதி முடிவெடுப்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு பிறகு மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து பாஜக தனது நிலையில் இருந்து சற்று இறங்கி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாநிலத்தில் பிடிபி மூத்த தலைவர் முப்தி முகமது சையது தலைமையில் கூட்டணி ஆட்சி விரைவில் பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறும்போது, கூட்டணி ஆட்சி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இறுதி முடிவெடுப்பார் என்றன. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு, ஆயுதப் படை சட்டத்தை வாபஸ் பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவுக்கும் பிடிபி கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.