முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி உரிய நேரத்தில் வராததால் டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் 45 நிமிடங்கள் தாமதம் ஆனது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து டெல்லி வழியாக ஹைதராபாத் நகருக்கு ஏர் இந்தியா விமானம் (ஏஐ-126) இயக்கப்படுகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ரேணுகா, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு டெல்லியில் இருந்து இந்த விமானத்தில் ஹைதராபாத் செல்லவிருந்தார். இந்நிலையில் விமான நிலைய ஊழியர்கள் தொடர்ந்து அறிவிப்பு செய்த பின்னரும் ரேணுகா உரிய நேரத்தில் வரவில்லை. இறுதியில் விமானம் புறப்படும் நேரத்துக்கு பின்னரே, அதாவது 7.04 மணிக்கே அவர் வந்துள்ளார். அவர் தாமதமாக வந்ததற்கு ஷாப்பிங் செய்வதில் அவர் மும்முரம் காட்டியதே காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த நேரத்தை தவறவிட்டதால் விமானம் உடனே புறப்பட முடியவில்லை. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி அளித்த அனுமதியின்படி 7.45 மணிக்கே அந்த விமானம் புறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா வட்டாரங்கள் கூறும் போது, “ரேணுகாவின் உடைமைகள் (லக்கேஜ்) ஏற்கெனவே விமானத் துக்கு சென்றுவிட்டதால் கடைசி நேரத்தில் அவற்றை வெளியே எடுக்க முடியவில்லை. எங்களுக்கு காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை” என்றன.
ரேணுகா மறுப்பு
இதுகுறித்து ரேணுகா கூறும்போது: “நான் ஷாங்பிங் சென்றதாக கூறுவதை அவர்களால் நிரூபிக்க முடியுமா? என்ன முட்டாள் தனமான பேச்சு இது? கால்வலி காரணமாக விமானப் புறப்பாடு பகுதிக்குச் செல்ல எலெக்ட்ரிக் கார் வசதி கேட்டிருந்தேன். ஆனால் அது வருவதற்கு அதிக நேரம் ஆகிவிட்டது” என்றார்.
விசாரணைக்கு உத்தரவு
இதுகுறித்து அதிகார வட்டாரங் கள் கூறும்போது, “விமானம் தாமதம் ஆனதால் ரேணுகா மீது சக பயணிகள் அதிருப்தி அடைந்தனர். ஏர் இந்தியா அதிகாரிகளிடம் இதுகுறித்து அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ‘ஏர் இந்தியா’ விசார ணைக்கு உத்தரவிட்டுள்ளது” என்றன