இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து `சோஷலிஸம்', `மதச்சார்பற்ற' ஆகிய வார்த்தை களை நீக்குவது குறித்து மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளிக்கும் விதமாக, மேற்கண்ட இரு வார்த்தைகளை நீக்கப்போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, "மத்திய அரசுக்கு அரசியலமைப்புதான் ஒரே புனித நூல் என்று சமீபத்தில் பிரதமர் மோடி கூறினார். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்தியாவில் மதச்சார்பின்மை வேண்டும் என்று கூறியுள்ளார்.
'சோஷலிஸம்', `மதச் சார்பற்ற' ஆகிய வார்த்தைகளைக் குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விவாதத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந் நிலையில், இந்த விஷயங்களில் அரசின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்" என்றார்.
அதற்குப் பதிலளித்த நாடாளு மன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "இந்த வார்த்தைகளை நீக்குவது குறித்து அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. 1976ம் ஆண்டு அரசிய லமைப்பு முகப்புரையில் கொண்டு வந்த திருத்தத்தில் எந்த மாற்றங் களும் மேற்கொள்ளப்பட மாட்டாது" என்று கூறினார்.
பின்னர், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அன்னை தெரசா பற்றி கூறிய கருத்துகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. ஆனால் அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அந்த விவாதத்துக்கு அனுமதி அளிக்கவில்லை.