இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய அமைப்பு தொடர்ந்த வழக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ரத்தத்துக்கு ரத்தத்தை எடுத்து பழி வாங்க வேண்டுமென்று சீக்கியர்களுக்கு எதிராக அமிதாப் பேசினார் என்பது குற்றச்சாட்டு. அவர் மீது மனித உரிமை மீறல் குற்றத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சம்மனுக்கு 21 நாட்களில் பதிலளிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹாலிவுட்டில் உள்ள அமிதாப்பின் மேலாளரிடம் இந்த சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
“21 நாட்களில் அமிதாப் பதிலளிக்காவிட்டால், அவர் மீது சட்டப்படி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். 1984-ம் ஆண்டு அமிதாப்பின் வன்முறையைத் தூண்டும் பேச்சால் நூற்றுக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்” என்று சீக்கிய அமைப்பின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
1984-ல் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. அப்போது சுமார் 2,800 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.