மகாசிவராத்திரியையொட்டி இன்று காளஹஸ்தி சிவன் கோயில் மற்றும் திருப்பதி கபிலேஸ்வரர் கோயில்களில் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தனி வரிசைகள், கூடுதல் பிரசாத விநியோக மையங்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அன்னதானம், பஸ் போக்குவரத்து, பாதுகாப்பு வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தில் நேற்று காலை, உற்சவர்களான சிவபெருமான் அன்ன வாகனத்திலும், ஞான பூங்கோதை தாயார் கிளி வாகனத்திலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இன்று மகா சிவராத்திரியையொட்டி அதிகாலை 2.30 மணியில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதனை தொடர்ந்து இரவு நந்தி வாகனமும், நள்ளிரவு லிங்கோத்பவ தரிசனமும் நடைபெற உள்ளது.
இதே போன்று திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் இன்று மகா சிவராத்திரியை யொட்டி, காலை தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நந்தி வாகன சேவை நடைபெறும். இரவு லிங்கோத்பவ தரிசனமும் நடைபெறும்.