இந்தியா

இந்தியா - இலங்கை உறவு மேலும் வலுவடையும்: மோடியை சந்தித்த பின் சிறிசேனா நம்பிக்கை

பிடிஐ, ஐஏஎன்எஸ்

இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையும் என்று டெல்லியில் இலங்கை அதிபர் மைதிரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்று இரவு டெல்லி வந்தார். இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

முன்னதாக அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு அளித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அணிவகுப்பு மரியாதையை சிறிசேனா ஏற்றுக் கொண்டார்.

பின்னர், ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிறிசேனா தனது மனைவி ஜெயந்தியுடன் மலரஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அணு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், மோடியும், சிறிசேனாவும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

சிறிசேனா பேசும்போது, "இந்தியாவுக்கும் - இலங்கைக்குகும் இடையே வலுவான பந்தம் இருக்கிறது. இதன் காரணமாகவே அதிபராக பதவியேற்ற பின்னே எனது முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவை நோக்கி அமைந்தது.

இந்தப் பயணத்தின்மூலம் இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பெறும். பல்வேறு ஒப்பந்தங்களில் இன்று இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியப் பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர், எங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டும்" என்றார் சிறிசேனா.

மீனவர் பிரச்சினை: மோடி உறுதி

முன்னதாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா - இலங்கை நட்புறவு புதிய பரிமாணங்களை எட்டும் தருணம் வந்துவிட்டது.

இலங்கை அதிபர் சிறிசேனா என்னை அவர்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். நிச்சயமாக வரும் மார்ச் மாதம் அவர்கள் நாட்டுக்குச் செல்வேன்.

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நானும், சிறிசேனாவும் முனைப்புடன் இருக்கிறோம். இந்தியா - இலங்கை பரஸ்பரம் நம்பிக்கைக்கு, இப்போது கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒரு சான்றாகும்.

விரைவில், இந்தியா - இலங்கை வர்த்தக செயலர்கள் அளவிளான சந்திப்பு நடைபெறும். மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விரிவாக ஆலோசித்தோம்" என்றார்.

திருப்பதியில் நாளை வழிபாடு

17-ம் தேதி பிஹாரில் உள்ள புத்த கயாவில் சிறிசேனா சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறார். அங்கிருந்து திருப்பதி செல்லும் அவர் ஏழுமலையானை வழிபடுகிறார். புதன்கிழமை காலை திருப்பதியில் இருந்து கொழும்பு புறப்படுகிறார்.

SCROLL FOR NEXT