காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி வழக்கமான கட்சிப் பணிகளில் இருந்து ஒரு சில வாரங்களுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், தோல்விக்கான காரணங்கள் குறித்து சுய பரிசோதனை செய்யவும், கட்சியை முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராயவும் ஒரு சில வாரங்களுக்கு கட்சிப் பணிகளிலிருந்து ராகுல் காந்தி. விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கட்சி வட்டாரம் கூறும்போது, "வழக்கமான கட்சிப் பணிகளில் இருந்து ராகுல் காந்திக்கு ஒரு சில வாரங்கள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் டெல்லி தேர்தல் உள்ளிட்ட அண்மைக்கால அரசியல் நிலவரங்கள் குறித்த புரிதலுடன் திரும்புவார்.
இதற்கான அனுமதியை அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பெற்றுக் கொண்டுள்ளார். வரவிருக்கும் அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை மிகவும் முக்கியமானதாக கருதுகிறார் ராகுல் காந்தி. அதற்காக அவர் நிறைய தயார் செய்ய வேண்டியுள்ளது. அதன் நிமித்தமாகவே இந்த விடுப்பை அவர் எடுத்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 70 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவராக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.