டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலம் பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் ராஜ்நாத் சிங் நேற்று கூறியதாவது:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று உறுதியாக நம்புகிறேன். மோடி தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அதேபோல் டெல்லியிலும் பாஜக அரசு அமைய அவர்கள் ஆதரவு தருவார்கள். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் வசிக்கவில்லை. காஜியாபாதில் வசிக்கிறார். நான் டெல்லியில் வசிக்கிறேன்.
கடந்த 40 ஆண்டு களாக மக்களோடு நேரடி தொடர்பில் உள்ளேன். தொடர்ந்து டெல்லி மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்.
இன்றைய தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தின மாகும். இத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன். பிரதமர் மோடியின் தலைமைக்கு மக்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.
டெல்லியில் பாஜக அரசு அமைந்தால் தூய்மை, பாதுகாப்பு, பெண் களுக்கு மரியாதை என உலகின் முன்னுதாரணமாக டெல்லி நகரம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.