டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றியை “சாமானிய மனிதனின்” வெற்றி என்று கூறி டெல்லி ஆட்டோ ஓட்டுநர்கள் கொண்டாடியுள்ளனர்.
இது குறித்து ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ஃபிரோஸ் ஆலம் என்ற 32 வயது ஆட்டோ ஓட்டுநர் இன்றைய தினம் வாடிக்கையாளர்களை ஏற்றி பணம் சம்பாதிப்பதை விடுத்து ஆம் ஆத்மியின் வெற்றியை நூதனமாகக் கொண்டாடியுள்ளார். தனது ஆட்டோவை மலர்களாலும், ஆம் ஆத்மி போஸ்டர்களாலும் அலங்கரித்த பிரோஸ் ஆலம் இதற்காக ரூ.1,200 செலவழித்ததாகக் கூறினார்:
“இது நடக்கும் என்று எனக்குத் தெரியும். ஆம் ஆத்மி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. 1,200 ரூபாய் செலவு செய்தது பற்றி கவலையில்லை. கொண்டாடப்படவேண்டியது எங்கள் கட்சி வெற்றி பெற்றது என்பதே.
சிறு சிறு விஷயத்துக்கெல்லாம் போலீஸ் எங்களைத் தொந்தரவு செய்து பணம் பிடுங்கி வந்தனர். கேஜ்ரிவால் அரசு இதனை தடுத்து நிறுத்தும். எங்களைப் போன்ற சாமானியர்களுக்காக ஆம் ஆத்மி பணியாற்றும்.” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பிரோஸ் ஆலம்.
2013-ஆம் ஆண்டு தேர்தலின் போதும் சரி, தற்போதைய தேர்தலின் போதும் சரி ஆட்டோ ஓட்டுநர்களின் ஆதரவு பெரிய அளவில் ஆம் ஆத்மிக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
சலீம் அன்சாரி என்ற 26 வயது ஆட்டோ ஓட்டுநர் உற்சாக மிகுதியில், “ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் ஆம் ஆத்மிக்கே வாக்களித்தோம். போலீஸ் எங்களை தொடர்ந்து தொந்தரவு செய்வது குறித்து நாங்கள் வெறுப்பில் இருந்தோம். இனி போலீஸ் எங்களை தொந்தரவு செய்யாது, எங்களிடமிருந்து பணம் பிடுங்காது.” என்றார்.
அக்சர்தாம் மேம்பாலத்தில் சுமார் 60 ஆட்டோ ஓட்டுநர்கள் துடைப்பத்துடன் ஆம் ஆத்மியின் வெற்றியை கூச்சலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
48 வயதான ஹரிந்தர் பாஸ்வான் இவர் கூறும்போது, “நான் வசிக்கும் இடத்தில் நிறைய ரிக்ஷாக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கடைவீதி சிறு வியாபாரிகள் இருக்கின்றனர். நாங்கள் அனைவரும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு வாக்களித்தோம், காரணம் அவர் எங்களுக்காக நிற்கிறார்.
மற்றொரு நபர் தினேஷ் குமார் கூறுகையில், “அவர் (கேஜ்ரிவால்) எங்களுக்காக குரல் கொடுத்தார். இப்போது நாங்கள் அவருக்கு உதவி புரிந்துள்ளோம். கடந்த 49 நாள் ஆட்சியில், எங்களுக்கிருந்த போலீஸ் தொல்லையை ஒழித்தார் கேஜ்ரிவால்.” என்றார்.
பிரதாப் சந்த் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு வயது 65, அவர் 30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார், என்று தொழிலுக்கு விடுப்பு அளித்துவிட்டு ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடினார், “எங்களுக்கு தினசரி இம்மாதிரியான மகிழ்ச்சி கிடைக்காது. எனது தின வருவாயை இழக்கும் அளவுக்கு மதிப்புமிக்க நாள்தான் இந்த நாள்,. இது எங்களது வெற்றி.” என்றார்.