கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாளில் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். கர் வாப்ஸி நிகழ்ச்சி, தேவலயங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் தங்களது பயத்தை தணிக்க வழிவகை செய்யுமாறு கோரினர். ஆனால், பிரதமர் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
அண்மையில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி, மத சகிப்புத்தன்மை, மத சுதந்திரம் பற்றி பேசியவை, கிறிஸ்தவர்களுக்கு எதிராக கடந்த 3 மாதங்களாக நடந்த சம்பவங்களுக்கான பிராயசித்தமாகவே பார்க்கப்படுகிறது.
கட்டாய மத மாற்றம், தேவாலயங்கள், கிறிஸ்தவ அமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கிறிஸ்தவ மதத் தலைவர்கள் பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், மோடி அமைதியாகவே இருந்து வந்தார்.
மத விவகாரத்தில் மோடி மவுனம் கலைக்க வேண்டும் என தேசிய, சர்வதேச ஊடகங்களில் வலியுறுத்தப்பட்ட அதே வேளையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் சிலர் தொடர்ச்சியாக கையெழுத்து இயக்கம் நடத்தி, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் எடுத்துரைக்க முற்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாகவே, இவ்விவகாரத்தில் மோடி மவுனம் கலைத்து விளக்கம் நல்க வேண்டியதன் கால, சூழல் அவசியத்தை அவருக்கு கிறிஸ்தவ தலைவர்கள் சிலர் எடுத்துரைத்தனர் என்று மோடியை சந்தித்த கிறிஸ்தவ அமைப்பினர் பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்றிருந்த மதத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, மத நல்லிணக்கம் தொடர்பாக இந்தியப் பயணத்தை முடித்துக் கொள்ளும் முன்னர் டெல்லியில் ஒபாமா பேசியதும், அதன் பின்னர், அமெரிக்காவில் பேசியதும் மோடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள செய்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மற்றுமொரு தரப்பில் முன்வைக்கப்படும் காரணத்தில், டெல்லி தேர்தல் முடிவுகள், பாஜகவை படு பாதாளத்தில் தள்ளின. ஆம் ஆத்மியின் வெற்றி மோடியை மவுனம் கலைக்க வைத்துள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம் என்கிறது.
பல்வேறு கருத்துகளும் வலம் வந்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், அரசியல் அறிவியல் வல்லுனர் பல்வீர் அரோரா கூறும்போது, "டெல்லியில் பாஜக புறக்கணிக்கப்பட்டது மிகப் பெரிய இடி. அந்த அதிர்வானது பாஜகவை தன் மீதான சுயபார்வையை மறு பரிசீலனை செய்ய வைத்திருக்கிறது. தனது போக்கை சீரமைக்கவும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது" என கூறியிருக்கிறார்.
அண்மைக்காலம் வரை, தேசத்தில் அனைவரது பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என மோடி கூறிவந்தாலும் எந்த ஒரு சமூகத்துக்கும், மதத்திற்கும் ஆதரவாக அறிக்கை அளிக்க மறுத்துவந்தார். நாட்டுக்குத் தேவை வளர்ச்சியே, வளர்ச்சிப் பாதையில் இருந்து விலகிச் செல்ல விரும்பவில்லை என கூறிவந்தார்.
ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய மோடி, மத மாற்றத்திற்கும், தேவாலயங்கள் தாக்குதல்களுக்கும் எதிராக பேசியுள்ளார். எந்த ஒரு மதத்துக்கும் எதிரான வன்முறையையும் சகித்துக் கொள்ள முடியாது என அவர் கூறியதை தனது ட்விட்டரிலும் பதிவு செய்து தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார் மோடி.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாளில் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். கர் வாப்ஸ் நிகழ்ச்சி, தேவலயங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் தங்களது பயத்தை தணிக்க வழிவகை செய்யுமாறு கோரினர். ஆனால், அதை செய்ய மறுத்துவிட்டார். இதை பிரதமரை சந்தித்த குழுவில் இடம்பெற்றிருந்த இரண்டு பேர் தி இந்துவுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த மற்றொரு உறுப்பினர் விஜெய்ஷ் லால் கூறும்போது, "இறுதியாக பிரதமர் பேசிவிட்டார். அதற்காக நாங்கள் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்பிரச்சினை குறித்து பிரதமர் வெளிப்படையாக பேச வேண்டும் என்பதே எங்களது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்தது.
சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை இனி வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்" என்றார்.
கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் பிரதமர் மோடியை சந்திதது குறித்து மற்றொரு உறுப்பினர் கூறும்போது, "கடந்த ஜூன் மாதம் முதல் பிரதமரை சந்திக்க அனுமதி கோரிவந்தோம். ஆனால், எங்களுக்கு டிசம்பர் 24 அன்றே அனுமதி கிடைத்தது. கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் ஓர் அறிக்கை அளிக்க வேண்டும் என கோரினோம். ஆனால் எங்கள் கோரிக்கையை பிரதமர் நிகாரித்துவிட்டார். "ஊடகங்களில் வெளியாவதை வைத்து நீங்கள் எந்த முடிவுக்கும் வராதீர்கள்" என கூறிவிட்டார். ஏமாற்றத்துடன் திரும்பினோம். பிரதமரின் மறுப்பு கிறிஸ்தவ சமுதாயத்தினர் மத்தியில் பரவியபோது, ஒரு விதமான ஏமாற்ற உணர்வு எல்லோரையும் ஆட்கொண்டது" என்றார்.
டிசம்பர் 1-ம் தேதி டெல்லியில் புனித செபாஸ்டின் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, கிறிஸ்தவ அமைப்பினர் பிரதமருக்கு ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் நாடு முழுவதும் நடந்த தேவாலயங்கள் மீதான தாக்குதல், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து பட்டியலிடப்பட்டிருந்தது. அந்த மனுவின் முடிவில், சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடும், வன்முறையும் உறுதியான அரசியல் நடவடிக்கைகளால் தடுக்கப்படும் என நம்புவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அந்த மனுவில், "இந்த தேசத்தின் வரலாற்றில், முன்னர் எப்போதும் இல்லாத ஒரு நிலையில் உங்களது அரசாங்கம் உள்ளது. அதே நிலையில்தான் நீங்களும் நிற்கிறீர்கள். மத பாகுபாடுகளைக் கடந்து இத்தேசத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமையை எதிர்கொண்டுள்ளீர்கள். சிறுபான்மை சமூகத்தினரான கிறிஸ்தவர்கள் தங்கள் தாய்நாட்டில் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
|தமிழில்:பாரதி ஆனந்த் |