பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளரான கிரண் பேடி தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம் போட்டியிடும் தொகுதி மக்களின் அன்பால் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக்கண்ணீர் விட்டதாக அவர் கூறியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.
தாம் போட்டியிடும் கிருஷ்ணா நகர் தொகுதியில் கிரண்பேடி பிரச்சாரம் நேற்று செய்து கொண்டிருந்தார். சுற்றி இருந்த பாஜக தொண்டர்கள் கோஷமிட்டுக் கொண்டிருந்த நிலையில், கிரண்பேடியின் கண்களில் திடீரென மளமளவென கண்ணீர் வரத் தொடங்கியது.
உடனே தனது மூக்குக் கண்ணாடியை கழற்றி துடைத்து விட்டு தண்ணீர் குடித்தார். அதன் பிறகும் சில நிமிடங்களுக்கு அவரது கண்களில் மீண்டும் கண்ணீர் வந்தது.
இதைப் பார்த்த தொலைக் காட்சி செய்தியாளர்கள், கிரண் பேடியை நோக்கி தங்களது கேமிராக்களை திருப்ப அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பின்னர் கிரண் பேடி செய்தியாளர்களிடம் கூறும்போது, “இங்குள்ள மக்கள் காட்டும் அன்பு எனது கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்து விட்டது. இவர்களின் அன்புக்கு பலன் கிடைக்கும் வகையில், டெல்லியில் மக்கள் மீது அன்பு செலுத்தும் அரசு அமையும். அனைவருக்கும் நற்பணி செய்வதுடன் நானும் இந்த மக்களுக்கு அன்பு செலுத்து வேன். மக்களின் நியாயமான தேவைகளை நிறைவேற்றுவதுடன் அவர்கள் அன்புக்கு உரியவளாக நான் இருப்பேன்” என்றார்.
கிரண்பேடி போட்டியிடும் கிருஷ்ணா நகர் தொகுதியில் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், கடந்த 30 வருடங்களாக பாஜக சார்பில் எம்எல்ஏவாக இருந்துள்ளார். இங்கு போட்டியிட்டு தொடர்ந்து வென்ற அவரை, மக்களவைத் தேர்தலில் சாந்தினி சவுக் தொகுதியில் பாஜக போட்டியிட வைத்து எம்பியாக்கியது. இதனால் அக்கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் தொகுதியாகக் கருதப்படும் கிருஷ்ணா நகரில் கிரண்பேடியை களமிறக்கி உள்ளது.