டெல்லியின் ஆறாவது முதல்வராக இன்று மதியம் 2.00 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால்.
ராம்லீலா மைதானத்தில் 4,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கொள்ளளவு 50,000 பேர் என்ற போதும் ஒரு லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தப்பட்டு, வெளியே மத்திய பாதுகாப்பு படைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
ராம்லீலா மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் முன்னிலையில் கேஜ்ரிவாலுக்கு டெல்லியின் துணைநிலை ஆளுநரான நஜீப் ஜங், பதவி பிரமாணம் செய்து வைப்பார். கேஜ்ரிவாலுடன் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் பதவி ஏற்க உள்ளனர். இதில் துணை முதல்வரான மணீஷ் சிசோடியா அமைச்சர்களாக கடந்தமுறை வகித்த சவுரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்தர் ஜெயின், புதியவர்களான கோபால் ராய், ஜிதேந்தர தோமர், கபில் மிஸ்ரா, சந்தீப் குமார் மற்றும் அசீம் அகமது கான் ஆகியோர் பதவி ஏற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவி ஏற்புக்குப் பின் ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்த செல்கிறார் கேஜ்ரிவால். பிறகு மாலை 4.30 மணிக்கு அலுவலகம் சென்று அங்கு பொதுமக்களையும் சந்திக்கிறார்.
விழாவில் பங்கேற்க அண்ணா ஹசாரே, பாஜகவின் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி, காங்கிரஸின் தேர்தல் பொறுப்பாளராக இருந்த அஜய்மாக்கன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. `பொதுமக்கள் ஆட்சியின் பதவி ஏற்பு விழாவுக்கு வாருங்கள்’ என தனது குரலை பதிவு செய்து டிவி மற்றும் எப்.எம் ரேடியோக்களில் வெளியிட்டுள்ளார் கேஜ்ரிவால்.