ஜப்பானிய பிணைக் கைதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மோடி தனது ட்விட்டரில், "ஹருனா யுகாவா, கென்ஜி கோட்டோ கொலை மிகவும் கொடூரமானது, துரதிர்ஷ்டவசமானது" என குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானை சேர்ந்த ஹருனா யுகாவா கடந்த 2014-ம் ஆண்டில் சிரியாவுக்கு சுற்றுலா சென்றார். அப்போது அவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அவரை மீட்க பத்திரிகையாளர் கென்ஜி கோட்டா சிரியாவுக்கு சென்றார். அவரையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இருவரையும் மீட்க ஜப்பானிய அரசு திரைமறைவு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் இருவாரங்களுக்கு முன்பு புதிய வீடியோவை வெளியிட்ட தீவிரவாதிகள், ஹருனா, கென்ஜியை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
கடந்த 25-ம் தேதி ஹருனா யுகாவாவின் தலையை துண்டித்து தீவிரவாதிகள் கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் கென்ஜி கோட்டாவையும் அதே பாணியில் கொலை செய்து இணையதளத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த இரு நிகழ்வுகளுக்கும் பிரதமர் மோடி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.