வடகிழக்கு மாநிலத்தவர்களை குடியேறியவர்கள் என்று பாஜக அழைத்துள்ளதற்கு திரிபுரா மாநில முதல்வர் மானிக் சர்கார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக இந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக டெல்லி தேர்தலையொட்டி பாஜக நேற்று தொலைநோக்கு அறிக்கை என்ற பெயரில் வாக்குறுதிகளை வெளியிட்டது. அது வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கப்படுவதை தடுக்க டெல்லியில் காவல் நிலையங்களில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், "வடகிழக்கு மாநிலங்களில் இருந்து டெல்லியில் குடியேறியவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை சுட்டிக்காட்டியுள்ள மானிக் சர்கார், "வட கிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ஒரு அங்கம். டெல்லியில் வசிக்கும் வட கிழக்கு மாநிலத்தவரும் இந்தியர்களே. அப்படியிருக்க, வடகிழக்கு மாநிலத்தவர்களை குடியேறியவர்கள் என்று பாஜக அழைத்துள்ளது மிகவும் தவறானது.
இந்த தவறான பார்வையை பாஜக திருத்திக் கொள்ள வேண்டும்" என கூறினார். திரிபுரா முதல்வரான மானிக் சர்கார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.