இந்தியா

பிஹார் சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் மாஞ்சி பரிந்துரை: ஐக்கிய ஜனதா தள சட்டப்பேரவை தலைவராக நிதிஷ்குமார் தேர்வு

ஐஏஎன்எஸ், பிடிஐ

பிஹார் சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதனிடையே பாட்னாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அந்தக் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் உள்ளது. அந்த மாநில முதல்வராக இருந்த நிதிஷ் குமார் கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். இதைத் தொடர்ந்து ஜிதன்ராம் மாஞ்சி முதல்வராகப் பதவியேற்றார்.

அண்மைகாலமாக கட்சி தலைமைக்கு எதிராக செயல்படும் மாஞ்சி, பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இந்த விவ காரத்தால் அவர் பதவி விலகக் கோரி கட்சியின் தலைவர் சரத் யாதவ், மூத்த தலைவர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் வலியுறுத் தினர். இதனை மாஞ்சி ஏற்க மறுத்துவிட்டார்.

மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ் குமார்

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. அந்தக் கட்சியில் மொத்தம் 115 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 97 பேர் கூட்டத்தில் பங்கேற் றனர். இந்தக் கூட்டத்தில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் பதவி யேற்க ஏதுவாக கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ராஷ்ட்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளும் நிதிஷ்குமார் முதல்வராக ஆதரவு தெரிவித்து எழுத்துப் பூர்வமாக கடிதம் அளித்துள்ளன.

சட்டப்பேரவையை கலைக்க மாஞ்சி பரிந்துரை

இதைத் தொடர்ந்து முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி அமைச் சரவைக் கூட்டத்தை அவசர மாகக் கூட்டினார். இதில் சட்டப் பேரவையை கலைக்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதிக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி னார். ஆனால் இந்தத் தீர்மானத் துக்கு மூன்றில் இரண்டு பங்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

பேரவையில் கட்சிகளின் பலம்

பிஹார் சட்டப்பேரவையின் பலம் 243. இதில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 115, பாஜக 88, ராஷ்டிரிய ஜனதா தளம் 24, காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் 1 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி நிதிஷ்குமாருக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. சட்டப்பேரவையை கலைக்க வேண்டும் என்ற முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் பரிந்துரையை பரிசீலிக்க வேண்டாம் என்று குடியரசுத் தலை வர் பிரணாப் முகர்ஜி, மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி ஆகியோருக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

மோடி அவசர ஆலோசனை

பிஹார் அரசியல் நிலவரம், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாஜக தலைவர்களுடன் டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பொதுச்செயலாளர் ராம் லால், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT