கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் உள்ளிட்ட நான்கு பேர், வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு வரும் 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
இந்திராகாந்தி படுகொலைக்குப் பின் நாடு முழுவதுவம் பல்வேறு பகுதி களில் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். குறிப் பாக டெல்லியில் 2,000க்கும் அதிகமான வர்கள் கொல்லப்பட்டனர். இதில் பெரும் பாலானவர்கள் சீக்கியர்கள்.
இவ்வழக்கில், சஜ்ஜன் குமார், பிரமானந்த் குப்தா, பீரியா, வேத பிரகாஷ், குஷால் சிங் ஆகியோர் மீது சுல்தான்பிரு பகுதியில் சுர்ஜித்சிங் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இரு பிரிவினருக்கு இடையே பகைமையை உருவாக்கியது, கொலை, கலவரத்தில் ஈடுபட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் குஷால் சிங் இறந்து விட்டார். இதனிடையே இவ்வழக்கை, கர்கர்டூமா மாவட்ட நீதிமன்றத்திலிருந்து, ரோஹினி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, தல்வந்த் சிங் ஜனவரி 31-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால், அவர் இடமாற்றத்தில் சென்று விட்டார். இதையடுத்து புதிய மாவட்ட நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ராகேஷ் சித்தார்த்தா இவ்வழக்கின் தீர்ப்பு வரும் 12-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.