வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள விவரம்:
"வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய வருமான வரித் துறை தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளோர் குறித்த விவரங்களை ஆதாரங்களுடன் அளித்தால் அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க அந்த நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக தானியங்கி தகவல் பரிமாற்றத்தை அமல்படுத்துவது குறித்து அந்த நாட்டுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
புதிய சட்டம்
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். இந்த சட்டம் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும். இதில் மிகக் கடுமையான விதிகள் வரையறுக்கப்படும்.
வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வருமானத்தை மறைத்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தின் மதிப்பில் 300 மடங்கு அபராதமாக விதிக்கப்படும்.
வெளிநாடுகளில் சொத்துகள் வைத்திருப்பவர்கள் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்படும். வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டு வங்கி முதலீடுகள் தொடர்பாக ஆண்டுதோறும் வருமான வரி தாக்கலின்போது தகவல் தெரிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
மேலும் கருப்பு பணத்தை மீட்க உதவும் வகையில் பி.எம்.எல். சட்டம், பெமா சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்" என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.