இந்தியா

வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற தவறிவிட்டது உ.பி. அரசு: சோனியா காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மத்திய அரசு போதிய நிதி அளித்தும் உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற ஆளும் சமாஜ்வாதி அரசு தவறிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தனது சொந்தத் தொகுதி யான ராய் பரேலியில் சோனியா காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ளார். 2-வது நாளான செவ்வாய்க் கிழமை தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது:

மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளிப்பது மத்திய அரசின் கடமை. அந்தக் கடமையை மத்திய அரசு தவறாமல் நிறைவேற்றுகிறது.

ஆனால் மத்திய அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்தி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது அந் தந்த மாநில அரசுகளின் பொறுப்பு.

பெரும்பாலான உத்தரப் பிரதேச கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. மத்திய நிதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்ற ஆளும் சமாஜ்வாதி அரசு தவறிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.

முன்னதாக புயமாவ் விருந்தினர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை காலையில் சுமார் 1500-க்கும் மேற் பட்ட மக்களைச் சந்தித்த சோனியா காந்தி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

மாலையில் அவர் சாத்வா, மானே ஹரு, பினோஹரா, நாக்புல்ஹா உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று அந்த கிராம மக்களுடன் கலந்துரையாடினார். மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ராய் பரேலியில் 17 கி.மீட்டர் தொலை வுக்கு அமைக்கப்படும் ரிங் சாலைப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

ராய் பரேலியில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டு மானப் பணிகள், கியூலா பஜார் பகுதியில் உள்ள சுகாதார நல மையம் ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT