ஆவின் கலப்பட வழக்கில் தொடர்புடைய வைத்தியநாதனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டுள்ளது.
ஆவின் பால் கலப்பட வழக்கு சில மாதங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டிவனம் அருகே ஒரு கிராமத்தில் ஆவின் பால் எடுத்துச் சென்ற டேங்கர் லாரிகளில் பால் கலப்படம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஆவின் நிறுவனத்தைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் உட்பட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
வழக்கில் தொடர்புடைய பெரும்பாலானோர் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர். இந்நிலையில், ஒப்பந்ததாரர் வைத்தியநாதனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி கள் டி.எஸ்.தாக்கூர், ஏ.கே.கோயல் அடங்கிய அமர்வு முன்பு ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. கடந்த ஐந்து மாதங்களாக சிறையில் இருந்து வருவதாகவும், வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் வைத்திய நாதன் சார்பில் ஆஜரான வழக் கறிஞர் முறையிட்டார். மேலும், இந்த வழக்கில் இன்னும் சிபிசிஐடி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, வைத்தியநாத னுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு மாதத் துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.