தெலங்கானா போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், தலா ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தீர்மானித்துள்ளார்.
தெலங்கானா தனி மாநிலம் கோரி நடைபெற்ற போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் உட்பட 864 பேர் உயிர் தியாகம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இந்நிலையில் 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தெலங்கானா போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்குவதற்கு வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. வேலை வேண்டாம் என்று கூறுவோருக்கு வியாபாரம் செய்ய நிதியுதவி வழங்கலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உயிர் தியாகம் செய்தவர்களின் விவரங்களை ஆட்சியர் தலைமையில் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.