பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, செய்தியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஜனநாயகத்தில், ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் தர்க்கமும் விவாதமும் நடைபெற வேண்டும். அனைத்து விஷயங்களும் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டும். இந்த விவாதங்களின் மூலம் சிறந்த முடிவுகள் கிடைக்கும் எனவும், அது பரம ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் நாங்கள் நம்புகிறோம்.
அனைத்து அரசுகளுக்குமே பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது சிக்கலானதுதான். அது தேசத்துக்கு முக்கியமான வாய்ப்பும் கூட. மிகச்சிறந்த சூழலில், அனைவரின் ஒத்துழைப்புடனும், அனைவரும் இணைந்து செயலாற்றும் விதத்திலும் இக்கூட்டத்தொடர் நடைபெறும் என நம்புகிறேன்.
அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் நீண்ட நேரம் சந்தித்துப் பேசினேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய விவகாரங்களில் ஆழமான விவாதம் நடைபெறும். இந்த அரசின் முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும். எல்லா பிரச்சினைகளிலும் ஆழ்ந்த விவாதம் நடைபெறும். சாதாரண மனிதர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மத்திய அரசின் முயற்சியை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் பிரதிபலிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.