இந்தியா

ஆவணங்கள் திருட்டு விவகாரம்: மேலும் இருவர் கைது

பிடிஐ

பெட்ரோலிய அமைச்சகத்தில் இருந்து அரசின் கொள்கைகள் குறித்த ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில் மேலும் இருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணை செயலாளரின் தனிப்பட்ட உதவியாளர்கள் ஆவர்.

பெட்ரோலிய அமைச்சகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டிருப்பது அண்மையில் அம்பலமானது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து ரிலையன்ஸ் உள்ளிட்ட ஐந்து முக்கிய நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 12 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை (வியாழாக்கிழமை) சுற்றுச்சூழல் அமைச்சக இணை செயலாளரின் தனி உதவியாளர் ஜிதேந்தர் நக்பால் மற்றும் வனத்துறை அமைச்சக இணை செயலாளரின் தனி உதவியாளர் விபின்குமாரும் கைது செய்யப்பட்டதாக டெல்லி குற்றவியல் பிரிவின் கூடுதல் காவல் ஆணையர் ரவீந்திர யாதவ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, "விபின்குமார் இதற்கு முன்னர் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறைக்கு மாற்றப்பட்டவர் ஆவார். அங்கிருந்து அவரது தொடர்புடைய நபர்களிடமிருந்து அவர் ரகசிய ஆவணங்களை கை மாற்றியுள்ளார்.

நக்பால் மற்றும் விபின் ஆகியவர்கள் திருடப்பட்ட ஆவணங்களை லோகேஷிடம் வழங்கி உள்ளனர்" என்றார். கைது செய்யப்பட்டுள்ள நக்பால் மற்றும் விபினின் பெயர்கள் இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திங்கட்கிழமை லோகேஷ் என்ற எரிசக்தித்துறை ஆலோசகர் குற்றவியல் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT