‘அரசு நிர்வாக விஷயங்களில், நீதிமன்றம் தலையிட கூடாது’’ என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
மத்திய கணக்கு தணிக்கை துறை தலைவராக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலர் சசிகாந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் வாதிடுகை யில் கூறியதாவது:
மத்திய கணக்குத் தணிக்கை துறை தலைவராக சசிகாந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளது சரியல்ல. ஏனெனில், அவர் பாதுகாப்புத் துறை செயலராக இருந்தபோது, பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. மேலும், வி.வி.ஐ.பி.க்கள் செல்வதற்கான ஹெலிகாப்டர்களும் வாங்கப்பட்டன. இதில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இவ்வாறு பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
அவருடைய வாதத்தை கேட்ட நீதிபதிகள், நியமனம் குறித்த விஷயத்தில் வெளிப்படையான நியமன நடைமுறைகள் குறித்து அறிய அட்டர்னி ஜெனரல் பதில் அளிக்க வேண்டும் என்றனர்.
அதற்கு மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி பதில் அளிக்கையில், ‘‘கணக்கு தணிக்கைதுறை தலைவர் நியமனம் குறித்து நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வகுக்குமானால், அது அரசியலமைப்பு அதிகாரத்தில் தலையிடுவது போலாகி விடும். பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் ஆலோச னையின்பேரில், கணக்கு தணிக்கை துறை தலைவரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார். இதில் நீதிமன்றத்தின் பங்கு எதுவும் இல்லை’’ என்றார்.