ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி மக்களவையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் சபை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். அப்போது, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசினார். அவர் பேசும்போது, ‘‘காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தன்னைத் தானே உள்ளாய்வு செய்து கொள்ள விடுமுறை எடுத்து சென்றுள்ளார் என்று கூறுகின்றனர். அதுபோல் காங்கிரஸும் தன்னை தானே இங்கு ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இங்கு முடியாவிட்டால், எங்காவது தொலைதூரத்துக்குச் சென்ற ஆய்வு செய்து கொள்ளட்டும்’’ என்று பேசினார். அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மக்களவை நேற்று காலை கூடியதும், அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் பேச்சுக்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியறுத்தியது.
அதற்கு வெங்கய்ய நாயுடு பதில் அளிக்கும்போது,
“நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை. நான் எல்லா கட்சிகளையும் தலைவர்களையும் மதிக்கிறேன். சபை மரபுக்கு மீறிய வார்த்தைகள் எதையும் நான் பேசவில்லை” என்றார். இந்தப் பதிலில் அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் சபை நடுவில் வந்து கண்டனக் குரல் எழுப்பினர்.
சபையில் கூச்சம் குழப்பம் நிலவியதால், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், சபையை 11.30 மணி வரை 15 நிமிடங்கள் ஒத்தி வைத்தார். மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பினர். அமளி தொடர்ந்ததால் அவையை மீண்டும் 15 நிமிடங்களுக்கு மக்களவைத் துணை தலைவர் தம்பிதுரை ஒத்திவைத்தார். இதனால் நேற்றைய சபை நடவடிக்கைகள் தடைபட்டன.
அப்போது மீண்டும் வெங்கய்ய நாயுடு கூறும்போது, “அவசர சட்டங்களைக் கொண்டு வர பாஜக.வுக்கு விருப்பமில்லை.அவசர சட்டங்களை காங்கிரஸ் கட்சிதான் கடந்த ஆட்சியில் கொண்டுவந்து தவறான முன்னுதாரணமாக திகழ்ந்தது. உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்பதைத்தான் நான் சொன்னேன்” என்றார்.
மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “சபை நடவடிக்கைகளில் இடையூறு செய்ய வேண்டும் என்பது காங்கிரஸின் நோக்கமல்ல. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக, மூத்த அமைச்சராக இருப்பவர் (வெங்கய்ய நாயுடு) எல்லா உறுப்பினர்களையும் சமமாக பாவித்து நடக்க வேண்டும். தனது விருப்பப்படி பேச அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இது எங்கள் சுய மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம். தனது பேச்சுக்கு வெங்கய்ய நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் இது ஒரு முன்னுதாரணமாகி விடும். அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், “அமைச்சர் தன்னிலை விளக்கம் அளித்து விட்டதால், இந்தப் பிரச்சினையை இத்துடன் விட்டு விடவேண்டும்” என்று கூறினார்.