இந்தியா

சொத்துகளை லஞ்ச ஒழிப்பு போலீஸார் மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளனர் - சசிகலாவின் வழக்கறிஞர் 5-ம் நாளாக விவாதம்

செய்திப்பிரிவு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை த‌மிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளனர், தங்க நகைகளை மதிப்பீடு செய்ததில் குளறுபடி நடந்துள்ளது என்று சசிகலாவின் வழக்கறிஞர் ஆர்.பசன்ட் வாதிட்டார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.பசன்ட் 5-ம் நாளாக வாதிட்டதாவது:

“1986-96 காலகட்டத்தில் சசிகலா ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்ஜிஆர், சசி எண்டர்பிரைசஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் டிவி, சைனோரா என்டர்பிரைசஸ், மெட்டல் கிங் உள்ளிட்ட நிறுவனங்களை நிர்வகித்துள்ளார். இந்த நிறுவனங்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி கட்டிடம் கட்டியுள்ளார். பல இடங்களில் பழைய‌ கட்டிடங்களை புதுப்பித்தார்.

1997-ம் ஆண்டு புதிய‌ கட்டிடங்களையும், புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்களையும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் மதிப்பீடு செய்தனர். அப்போதைய சந்தை மதிப்பில் கட்டிடங்களின் மதிப்பை பல மடங்கு அதிகமாக நிர்ணயித்து, மிகைப்படுத்தி காட்டியுள்ளனர். புதுப்பிக்கப்படாத கட்டிடங்களையும் சசிகலா அதிக செலவிட்டு புதுப்பித்ததாக தெரிவித்துள்ளனர்.

இதே போல வழக்கு காலத்துக்கு முன்பே ஜெயலலிதாவிடம் 7040 கிராம் தங்க நகைகளும், சசிகலாவிடம் ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளும் இருந்தன. இது தொடர்பாக வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.ஆனால் நகைகளை மதிப்பீடு செய்த‌ லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவற்றின் மதிப்பை மிகைப்படுத்தி வழக்கில் சேர்த்துள்ளனர்.

சசிகலா நிர்வாக இயக்குநராக இருந்த நமது எம்ஜிஆர், மெட்டல் கிங் ஆகிய நிறுவனங்களுக்கு 1986-91 காலகட்டத்தில் இயந்திரங்களும், புதிய வாகனங்களும் வாங்கப்பட்டன. ஆனால் அவை 1991-96 காலகட்டத்தில் வாங்கப்பட்டதாக வழக்கில் சேர்க்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல வாகனங்கள் வாங்கியதை அரசுத் தரப்பு ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை.

இதே போல நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு வாங்கப்பட்ட அச்சு இயந்திரங்களை விசாரணை அதிகாரிகள் பல ஆண்டுகள் கழித்து மதிப்பிட்டனர். அப்போதைய சந்தை மதிப்பின்படி, 20 சதவீதம் அதிகமாக மதிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் சசிகலா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்துள்ளதாக நிரூபிக்க முயன்றுள்ளனர்.

இவ்வழக்கில் ஜெயலலிதா, ச‌சிகலா ஆகியோரின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் ரூ. 8 கோடி அளவுக்கு மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது” என்றார்.

திமுக, சுவாமி மனு மீது இன்று விசாரணை

இதையடுத்து நீதிபதி, “திமுக மனுதாரர் அன்பழகன் எங்கே? உங்களுடைய மனுவையும், சுப்பிரமணிய சுவாமியின் மனுவையும் ஒன்றாக விசாரித்து, புதன்கிழமையே முடித்து விடுகிறேன்.அதன் பிறகு ஒன்றாகவே உச்ச நீதிமன்றத்தில் முறையிடுங்கள்” எனக்கூறி வழக்கை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

SCROLL FOR NEXT