கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடியில் மாநில எல்லையில் சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களுக்குச் செல்ல லாரிகளுக்கு, டிரான்சிஸ்ட் பாஸ் எனப்படும் நுழைவுச்சீட்டு ஜூஜூவாடியில் உள்ள வணிக வரித்துறை சோதனைச்சாவடியில் வழங்கப்பட்டு வந்தது. இரும்பு தளவாடப் பொருட்கள், சமையல் எண்ணெய், விலை உயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை ஏற்றிச் செல்ல பாஸ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதிக்குப் பிறகு, நுழைவுச் சீட்டுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற வேண்டும் என்றும், அந்தந்த சோதனைச் சாவடிகளில் நுழைவுச் சீட்டு வழங்கப்படாது என்றும் சென்னை வணிக வரித்துறை அலுவலகம் மூலம் அறிவிக்கப்பட்டது. இதனை அறியாத லாரி உரிமையாளர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு, தமிழகம் வழியாக பிற மாநிலங் களுக்குச் செல்ல ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நுழைவுச் சீட்டு கேட்டனர்.
அப்போது வணிக வரித்துறை அதிகாரிகள், ஆன்லைன் மூலம் மட்டுமே நுழைவுச்சீட்டு பெற முடியும் எனவும், இங்கு வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர். இதன் காரணமாக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் சுமார் 200-க்கும் அதிக மான லாரிகள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. இதன் காரணமாக போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லாரி ஓட்டுநர்கள் உரிமையாளர்களிடம் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் ஆன் லைன் மூலம் நுழைவுச் சீட்டு பெற்று ஓட்டுநர்களிடம் கொடுத்த பிறகே வாகனங்கள் செல்ல அனு மதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து வணிக வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏற் கெனவே லாரி உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினருக்கு, இந்த அறிவிப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினர்.