பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் வகையில் குஜராத் மாநிலத்தில் எழுப்பப்பட்டுள்ள கோயில் குறித்து, பிரதமர் அதிர்ச்சி தெரிவித்ததை தொடர்ந்து அக்கோயில் திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் அருகே கோத்தாரியா என்ற கிராமத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் எழுப்பப்பட்டு, அதில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. இக்கோயில் வரும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது பெயரில் கோயில் கட்டப்படுவது குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது நமது இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது. தனிப்பட்ட முறையில் இது என்னை கவலை அடையச் செய்தது. அவ்வாறு செய்யக்கூடாது என நான் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு செலவிடும் நேரம் மற்றும் நிதியை நமது கனவான சுத்தமான இந்தியாவை உருவாக்குவதில் செலவிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
பிரதமரின் இந்த வேண்டுகோள் வெளியான சில மணி நேரத்தில், அக்கோயில் திறப்பு விழா ரத்து செய்யப்படுவதாக கோத்தாரியா கிராம மக்கள் தெரிவித்தனர்.
ராஜ்கோட் நகரை ஒட்டியுள்ள கோத்தாரியா கிராமம் சமீபத்தில் தான் ராஜ்கோட் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இந்த கிராமத்தில் பாரத மாதா கோயில் கட்ட 350 சதுர அடி நிலத்தை கிராம பஞ்சாயத்து 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கியது.
இதையடுத்து கோயில் கட்டுமானப் பணி சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் மோடி பிரதமர் ஆனவுடன் அவரது சிலையை வைக்க அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஒடிஸாவில் இருந்து சிற்பக் கலைஞர்களை வரவழைத்து மோடியின் மார்பளவு சிலையை வடித்துள்ளனர். பின்னர் இச்சிலையை 4 அடி உயர பீடத்தில் வைத்து, சிலைக்கு மேலே பித்தளையால் ஆன சிறிய கோபுரமும் அமைத்துள்ளனர்.
மோடியின் சிலைக்கு ரூ.1.6 லட்சம் செலவிட்டது உட்பட மொத்தம் ரூ.4.5 லட்சம் செலவில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் திறப்பு விழாவுக்கு ராஜ்கோட் எம்.பி.யும் மத்திய அமைச்சருமான மோகன்பாய் குண்டரியா மற்றும் உள்ளூர் பாஜக தலைவர்களுக்கு கிராம மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மோடி கவலை தெரிவித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் தங்களின் முந்தைய திட்டப்படி அங்கு பாரத மாதா சிலை வைக்க முடிவு செய்துள்ளனர்.