இந்தியா

மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கோவா காங்கிரஸ் சாடல்

செய்திப்பிரிவு

மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக கோவா மாநில காங்கிரஸ் கட்சி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், டெல்லியில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து கிறிஸ்தவர்கள் நடத்திய பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தியது குறித்து பாஜகவைச் சேர்ந்த சிறுபான்மை எம்.எல்.ஏ.க்கள் மவுனம் காப்பது கண்டனத்துக்குரியது என கோவா மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியில் அண்மைக்காலமாக தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனைக் கண்டித்து கடந்த 5-ம் தேதியன்று டெல்லியில் கிறிஸ்தவர்கள் பேரணி மேற்கொண்டனர்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை டெல்லி போலீஸார் பாதியிலேயே தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து கோவா காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுனில் காவ்தங்கர் கூறும்போது, "அமைதியாக பேரணி சென்றவர்களை காவல்துறையினர் அடக்குமுறையை ஏவி கட்டுப்படுத்தியது கண்டனத்துக்குரியது.

சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பாஜகவில் உள்ள சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள்கூட மவுனம் காப்பது வருத்தம் அளிக்கிறது.மோடி அரசின் மத சார்பு இதன்மூலம் வெளிப்படுகிறது. மோடி ஆட்சியில், சிறுபான்மையினர் பாதுகாப்பு கேள்விக்குரியாகியுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT