இந்தியா

ஐ.என்.எஸ்.சிந்துரத்னா விபத்து: கடற்படை அதிகாரிகள் 7 பேருக்கு தண்டனை

செய்திப்பிரிவு

கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.சிந்துரத்னா கப்பல் விபத்துக்குள்ளானது. அந்த விபத்துக்குக் காரணமான 7 கடற்படை அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமான பணியின் போது இந்தக் கப்பலில் திடீரென்று தீ விபத்து ஏற் பட்டது. இதில் இரண்டு அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும் 7 மாலுமிகள் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்போதைய கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் டி.கே.ஜோஷி, இந்த விபத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்த விபத்துக்கு அந்தக் கப்பலின் தளபதி உட்பட 7 அதிகாரிகள் ‘நிலையான இயக்க முறைமை'களைச் சரியாகப் பின்பற்றாததே காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் அந்தக் கப்பலின் தளபதி ராணுவ நீதிமன்றத்தில் வழக்கைச் சந்திப்பார் என்றும், இதர ஆறு அதிகாரிகளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விருதுகளோ அல்லது பதவி உயர்வுகளோ வழங்கப்பட மாட்டாது என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளன.

SCROLL FOR NEXT