டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஜனதா தர்பார் 2-ஆம் நாளான இன்று மாற்றுத் திறனாளிகள் சந்திப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ஆம் ஆத்மி கட்சியின் கவுஷாம்பி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. முதல்வர் கேஜ்ரிவாலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. நலம் விரும்பிகள் உட்பட சுமார் 500 பேர் இனிப்புகள் மற்றும் மாலைகளுடன் ஜனதா தர்பாருக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு குறித்து காசியாபாத் நகர மேஜிஸ்ட்ரேட் கபில் சிங் கூறும் போது, “முதலில் மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்தார் கேஜ்ரிவால். அவர்கள் எந்த நேரத்தில் வந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க கேஜ்ரிவால் முடிவெடுத்தார்.” என்றார்.
புகார்கள் காலை 8 மணி முதல் வந்து குவியத் தொடங்கின. பிறகு 5 ஆண்கள் 5 பெண்கள் என்று முதல்வர் கேஜ்ரிவாலைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
11.30 மணியளவில் கேஜ்ரிவால், “நான் ஒரு முக்கிய கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவே நான் உடனடியாகச் செல்ல வேண்டும். ஆனால். நீங்கள் இங்கிருந்து சென்று விட வேண்டாம். உங்கள் புகார்கள் அனைத்தையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்த பிறகு செல்லுங்கள், ஏனெனில் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவே எனக்கு வாக்களித்துள்ளீர்கள்.” என்றார்.
முதல்வர் அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரி அமித் சபாரியா கூறும்போது, “அனைத்துப் புகார் கடிதங்களையும் வசூலித்து குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்ப்போம்.” என்றார்.
ஆனால், ஒரு சிலர் இந்த ஏற்பாட்டின் மீது அதிருப்தி அடைந்தனர். அதாவது சிலரைச் சந்திக்காமல் கேஜ்ரிவால் சென்றது அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கட்சித் தொண்டர்கள் அவர்களுக்கு நிலைமையை விளக்கினர். ஒவ்வொரு புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஜனதா தர்பார் நடைபெறும் என்று உறுதியளித்தனர்.
பார்வையிழந்த 45 வயது மாற்றுத் திறனாளி பிரேம்குமார் என்பவர் கேஜ்ரிவாலைச் சந்தித்த பிறகு, “எனக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாத நிலைக்கு கேஜ்ரிவால் வருந்தினார். ஆனால், நான் வசிப்பதற்கான இடம் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதாகத் தெரிவித்தார்.” என்று கூறினார்.