இந்தியா

எய்ம்ஸ் கண்காணிப்பு அதிகாரியாக இருந்தவர் டெல்லி லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைவராக சதுர்வேதி நியமனம்?- ஆம் ஆத்மி அரசு பரிசீலனை

செய்திப்பிரிவு

எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் தலைமை கண்காணிப்பு அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதியை டெல்லி லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு தலைவராக நியமிக்க ஆம் ஆத்மி அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறும்போது, “சதுர்வேதியை டெல்லி லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு தலைவராக நியமிக்க விரும்புகிறோம். அவர் இந்தப் பதவியில் அமர்ந்தால் இந்த அமைப்பு 100 மடங்கு வலிமை பெறும்” என்றார்.

இதற்கிடையே, டெல்லி லஞ்ச ஒழிப்பு பிரிவின் தலைவராக சதுர்வேதியை நியமிப்பதற்கான பணிகளை புதிய அரசு ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல்வர் கேஜ்ரிவாலும் இதில் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது.

எனினும், மத்திய அரசுப் பணியிலிருந்து அவர் விடுவிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத் துறையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கடிதம் எழுத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹரியாணா பிரிவைச் சேர்ந்த இந்திய வனப்பணி அதிகாரியான சதுர்வேதி, கடந்த ஆண்டு எய்ம்ஸ் தலைமை கண் காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பொதுச் செயலாளரும் இப்போதைய மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா மத்திய பணியாளர் நலத் துறைக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து சதுர்வேதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

நேர்மையான அதிகாரியான சதுர்வேதி, பாஜகவினரின் நெருக்குதலால் பதவியிலிருந்து நீக்கியதற்காக ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதற்கு பொறுப்பேற்று அப்போதைய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதவி விலக வேண்டும் என்றும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT