டெல்லியில் பாஜகவை தூசை துடைத்து வாரி அள்ளுவது போல் ஆம் ஆத்மி கட்சி தனது துடைப்பத்தால் ஒதுக்கிவிட்டது என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
டெல்லி தேர்தலில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சி சிவசேனாவின் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் சாம்னாவின் தலையங்கத்தில் பாஜக இவ்வாறு விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: "மக்களவை தேர்தலில் தனிப் பெரும்பான்மை வெற்றி கொண்ட பாஜக டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் துடைப்பத்தால் தூசு போல் தட்டி வாரப்பட்டுள்ளது. வெறும் தேர்தல் வாக்குறுதிகளாலும், மேடைப் பேச்சுகளால் மட்டுமே தேர்தல் வெற்றிக்கு வித்திட முடியாது என்பதை பாஜக இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.
டெல்லி தேர்தல் வெற்றியை எண்ண விரல்கள்கூட தேவையில்லை. சொற்ப இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் தோல்விக்கு கிரண் பேடியை மட்டுமே காரணமாக சொல்வது சரியாகாது. மாநிலத்தில் நிலவிய உட்கட்சிப் பூசலும் ஒரு காரணம். அமித் ஷா தனது மந்திரத்தை பிரயோகப்படுத்த தவறிவிட்டார். கடைசி ஆயுதமாக மோடி களமிறக்கப்பட்டார். ஆனால், அவரது மேடைப் பேசுகளும், வாக்குறுதிகளும் எடுபடவில்லை.
இத்தருணத்தில் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும். மொத்த கட்சியுமே தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். ஒட்டுமொத்த பிரச்சாரமும் மோடியின் பெயரால் அரங்கேற்றியது பாஜக. எனவேதான் இது மோடியின் தோல்வி என அன்னா ஹசாரே கூறியிருக்கிறார். நாங்களும் அதை ஏற்கிறோம். மற்ற மாநில தேர்தல்களில் கிடைத்த வெற்றியை மோடிக்கு உரித்தாக்கிய பாஜக டெல்லி தோல்வியையும் மோடிக்கே உரித்தாக்க வேண்டும்.
பாஜாகவின் தோல்வியையும், ஆம் ஆத்மி எழுச்சியையும் தேசிய அரசியலில் ஒரு புதிய சகாப்தம் உருவாவதாக எடுத்துக் கொள்ளவேண்டுமா? மக்கள் ஏன் பாஜகவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர்?
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு டெல்லிக்கு என்ன செய்தது? அங்கு இன்னும் வேலைவாய்ப்பு தட்டுப்பாடு குறையவில்லை. வீடில்லாதவர்கள் தொடர்து தெருவாசியாகவே இருக்கின்றனர். இவற்றைக் கண்டு கொள்ளாமல், தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராகுல் காந்தியையும், கேஜ்ரிவாலையும் விமர்சிப்பதையே மோடியும் அவரது சகாக்களும் செய்தனர். 'எதிர்மறை பிரச்சாரம்' இதன் விளைவுகளை பாஜக அனுபவித்தே ஆக வேண்டும்" இவ்வாறு அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.