உலகக்கோப்பை போட்டிகளை தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களுடன் பகிர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இவ்வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் முன்னர் விதித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வழக்கு பின்னணி:
கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் உலகக்கோப்பை போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸிலிருந்து வாங்கி ஒளிபரப்புவதால் தங்களது வர்த்தகம் பாதிக்கிறது என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புவதற்கு தடை விதித்தது.
டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்தது.
இதனையடுத்து, இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, உலகக்கோப்பை போட்டிகளை தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களுடன் பகிர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
நேற்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையின்போது, தனி சேனல் தொடங்கி அதில் உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்ப வாய்ப்பிருக்கிறதா என்று தெரிவிக்கக் கோரியிருந்தது உச்ச நீதிமன்றம்.
ஆனால், உலகக்கோப்பை போட்டிகளை நேரலை ஒளிபரப்பு செய்ய தனி சேனலை தொடங்க சாத்தியமில்லை என்று பிரசார் பாரதி நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.