உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி சொத்துகள் குவித்த, அரசு தலைமை பொறியாளர் யாதவ் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.
நொய்டாவில் உள்ள யாதவ் சிங்கில் வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.100 கோடி மதிப்புள்ள வைரங்கள், 2 கிலோ தங்கம், கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம், யாதவ் சிங் பெயரில் 20 சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கின. மேலும் அவரது மனைவியின் பெயரில் 40 போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சொத்துகள் 9 ஆயிரம் கோடிக்கும் அதிகம் இருக்கும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதுதொடர்பான மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி உ.பி. அரசுக்கு கருப்பு பணம் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் சிபிஐக்கும் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் எக்ஸ்பிரஸ்வே ஆணையங்களுக்கு யாதவ் சிங் பொறுப்பாளராக பதவி வகித்தார். உ.பி. அரசில் 1980-ல் இளநிலை பொறியாளராக பணியை தொடங்கிய இவர், 20 ஆண்டுகளில் தலைமை பொறியாளராக உயர்ந்தார்.
2012-ல் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சமாஜ்வாதி கட்சி அரசு இவரை சஸ்பெண்ட் செய்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் கூடுதல் அதிகாரத்துடன் அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.