இந்தியா

டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண் பாலியல் பலாத்காரம்: ஓட்டுநர், நடத்துநர் தலைமறைவு

செய்திப்பிரிவு

டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பலாத்காரத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துனரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சம்பவம் குறித்து டெல்லி போலீஸார் கூறும்போது, "கடந்த சனிக்கிழமை இரவு, உத்தரப்பிரதேச அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்தில் திருமணமான பெண் ஒருவர் ஏறியுள்ளார்.

கனோஜ் பகுதியில் ஏறிய அவர் தாத்ரி செல்ல பயணச்சீட்டு வாங்கியுள்ளார். ஆனால், அவர் இறங்கும் இடத்தை கவனிக்காமல் விட்டுவிட்டார். இதனால், வேறுவழியின்றி அவர் டெல்லி வந்தடைந்தார்.

அப்போது பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் அந்தப் பெண்ணை மீண்டும் தாத்ரியில் இறக்கிவிடுவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அந்தப் பெண் மீண்டும் பேருந்தில் பயணித்துள்ளார். ஆனால், அவரை ஓட்டுநரும் நடத்துனரும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, இந்த சம்பவம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடிய ஓட்டுநர், நடத்துனரை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளனர்.

டெல்லியில், கடந்த 2012-ல் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சம்பவம் பெரிய எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டெல்லியில் மீண்டும் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT