இந்தியா

ஜெ. மேல்முறையீட்டு வழக்கு: சொத்து வரவு-செலவு பட்டியலை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு

இரா.வினோத்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகள், வருமானம், செலவு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்யும்படி கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான‌ எல்.நாகேஸ்வர ராவ் 7-வது நாளாக தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார்.அப்போது அவர் வாதிட்டதாவது:

கடந்த 1992-ம் ஆண்டு ஜெயலலிதா தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடினார். தொண்டர்கள் அவருக்கு ரூ 2.15 கோடி(வங்கி வரைவோலை மூலம்) அன்பளிப்பாக வழங்கினர். ஜெயலலிதா அரசியலை முழுநேர‌ தொழிலாக கொண்டுள்ளதால், வருமான வரித்துறை அதனை அவரது வருமானமாக ஏற்றுக்கொண்டது.

1993-ம் ஆண்டு இதற்கு வ‌ரு மான வரி செலுத்தப்பட்டுள்ளது. இதனை வருமான வரித்துறை தீர்ப்பாயமும் ஒப்புக்கொண்டது. ஆனால், விசாரணை நீதிமன்றம் பரிசாக வந்த‌ பணத்தை வருமானமாக ஏற்கமுடியாது என கூறியுள்ளது. .

1988-ம் ஆண்டில் இருந்து ஜெயலலிதா சசிகலாவுடன் இணைந்து ‘ஜெயா பப்ளிகேஷன்' என்ற நிறுவனத்தை நடத்துகிறார். அந்த நிறுவனத்துக்கு விவசாயத்தின் மூலமாகவும், கட்டிடங்களை வாடகைக்கு விட்டதன் மூலமாகவும், அச்சகத்தின் மூலமாகவும், நமது எம்ஜிஆர் செய்தித்தாளின் மூலமாகவும் வருமானம் வந்தது. 'நமது எம்ஜிஆர்' செய்தித்தாளின் சந்தா திட்டத்தின் மூலமாக மட்டும் ரூ 15.1 கோடி வருமானம் வந்தது. இதனை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டது.

விசாரணை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே நமது எம்ஜிஆர் செய்தித்தாள் மூலமாக வந்த ரூ.15.1 கோடி பணத்தை ஜெயலலிதாவின் வருமானமாக ஏற்க வேண்டும். இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 9 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அப்போது நீதிபதி,''இவ்வளவு குறுகிய காலத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடியுமா? அப்படியென்றால் விசாரணை அதிகாரிகளுக்கு நிறைய அழுத்தங்கள் இருந்திருக்கும். நீங்கள்(ஜெ.தரப்பு) முக்கியமான விஷயத்தை சுருக்கமாக கூறுங்கள். அப்போதுதான் வழக்கை முடிக்க முடியும்” என்றார்.

மேலும், ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், அவருடைய மொத்த‌ வருமானம், செய்த செலவுகள், வருமானத்துக்கான ஆதாரங்கள், செலுத்திய வரி விவரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தர விட்டார்.

கருணாநிதிதான் காரணமா?

நமது எம்ஜிஆர் பத்திரிகை குறித்து ஜெ தரப்பு கூறிய போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி, ''ஜெயலலிதா எதற்காக நமது எம்ஜிஆர் பத்திரிக்கை ஆரம்பித்தார்'' என வினவினார். அதற்கு அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குமரேசன், 'திமுக தலைவர் கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராக இருந்துள்ளார். 92 வயதிலும் இடைவிடாமல் ‘முரசொலி' செய்தித்தாளை நடத்தி வருகிறார்.அதே போல ஜெயலலிதாவும் 'நமது எம்ஜிஆர்' செய்தித்தாளைத் தொடங்கி நடத்துகிறார்'' என்றார்.

அப்போது நீதிபதி, ‘‘கருணாநிதி 92 வயதான போதும் ஒரு பத்திரிகையாளராக செய்தித்தாள் நடத்தி வருவது வியப்பாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் ஜெயலலிதா செய்தித்தாள் ஆரம்பிப்பதற்கும் அவர்தான் காரணமா?'' எனக் கேட்டார். இதனால் நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

SCROLL FOR NEXT