இந்தியா

மேல்முறையீட்டில் இறுதி வாதம் தொடங்கியது: பினாமி சட்டப்படி தண்டனை வழங்கியது தவறு- ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் வாதம்

இரா.வினோத்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பினாமி பரிவர்த்தனை சட்டப்படி தண்டனை வழங்கியது தவறு. அவருக்கு யாரும் பினாமி இல்லை என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இறுதிவாதத்தின் போது எடுத்துரைத்தார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எல்.நாகேஸ்வர ராவ், ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதியும், வழக்கறிஞருமான ஆர்.பசன்ட், வழக்கறிஞர் பி.குமார் உள்ளிட்டோர் ஆஜராயினர்.

அப்போது ஜெயலலிதா தரப்பில் இறுதிவாத‌த்தை தொடங்கிய உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் வாதிட்டதாவது:

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தனது வருமானம் தொடர்பாக சரியாக வருமான வ‌ரி செலுத்தியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வருமான வரி தாக்கல் செய்ததை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

அதேபோல லஞ்ச ஒழிப்பு சட்டம் 13(1) ஈ-பிரிவின்படி, பொது ஊழியர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக ஜெயலலிதா வுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பொது ஊழியர் மீதான குற்றச் சாட்டை விசாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், இவ்வழக்கில் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக எம்எல்ஏ, எம்.பி. மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் விதிமுறைக‌ள் ஜெயலலிதா வழக்கில் மீறப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் தனது வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம், பல மாநில உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த ஆணைகளை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

இதையடுத்து வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை நீதிபதி குமாரசாமி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத் தார்.

SCROLL FOR NEXT