இந்தியா

ஜெ. அசையா சொத்து மதிப்பு ரூ.3.62 கோடிதான் - கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இறுதி வாதம்

இரா.வினோத்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சொத்துகளை மதிப்பீடு செய்ததில் குளறுபடி நடந்துள்ளது. ரூ.13.64 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள அவரின் அசையா சொத்துகளின் மதிப்பு உண்மையில் ரூ. 3.62 கோடிதான் என அவரது வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இறுதி வாதத்தின்போது தெரிவித்தார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எல்.நாகேஸ்வர ராவ், மூத்த வழக்கறிஞர் பி.குமார், அசோகன், மணிசங்கர் உள்ளிட்டோர் ஆஜராகின‌ர்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் 4-வது நாளாக தனது இறுதிவாதத்தை தொடர்ந்தார். அப்போது அவர் வாதிட்டதாவது:

சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையின் போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஜெயலலிதாவின் அசையா சொத்துகளை மதிப்பிட இரு குழுக்களை அமைத்தனர். இக்குழு ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு, ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் உள்ள ஜி.டி.மெட்லா கட்டிடம் ஆகியவற்றை மதிப்பீடு செய்தது.

இந்த இரு இடங்களிலும் உள்ள கட்டிடம், புதுப்பிக்கப்பட்ட செலவு, சலவை கற்கள், அலங்கார பொருட்கள், மின் சாதனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் விலைப்பட்டியல் தயாரித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.13.64 கோடி குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மதிப்பீடு எத்தகைய அடிப்படையும் இல்லாமல், மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.

ரூ.3.62 கோடி மட்டுமே

போயஸ் கார்டன் வீடு, ஹைதாரபாத் திராட்சை தோட்டம் தொட‌ர்பாக ஜெயலலிதா 1995-96ம் ஆண்டு வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்துள்ளார். அதில் இரு சொத்துகளின் மதிப்பு ரூ.3.62 கோடி என தெரிவித்ததை, வருமானவ‌ரி தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மதிப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

உதாரணமாக அரசு தரப்பு சாட்சியான மும்பையை சேர்ந்த சலவை கல் வியாபாரி மாடசாமி என்பவர் அளித்த வாக்குமூலத்தில், “ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை புதுப்பிக்க ஒரு சலவைக்கல் ரூ.100-க்கு விற்றேன். அதனை மதிப்பீடு செய்தவர்கள் ரூ.20,000 என மதிப்பிட்டுள்ளனர்'” என கூறியுள்ளார்.

இதிலிருந்து ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பீடு செய்ததில் குளறுபடி நடந்துள்ளது தெரிய வருகிறது.

ஜெயலலிதாவின் சொத்துகள் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளதை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

ஆனால் அதன் உண்மையான மதிப்பை ஆதாரத்துடன் நிரூ பிக்குமாறு எங்களது தரப்பை கோரியுள்ளது. வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தானே, உண்மையான மதிப்பை தாக்கல் செய்ய வேண்டும்.

எனவே இவ்வழக்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆதாரமாக இருக்கும் வருமானவரி தீர்ப்பாயத்தின் சான்றிதழை கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். அதன்படி ஜெயலலிதாவின் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.3.62 கோடி மட்டுமே என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, வழக்கின் விசா ரணையை செவ்வாய்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தார்.

SCROLL FOR NEXT