இந்தியா

ஜனார்த்தன ரெட்டி ஜாமீனில் விடுதலை: பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

இரா.வினோத்

சுரங்க ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி நேற்று பெங்களூரு மத்திய சிறையிலிருந்து விடுதலை ஆனார். சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் வெளியே வருவதால் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டியின் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் உட்பட பல நிறுவனங்களில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவ‌தாக புகார் எழுந்தது. இதனால் சிபிஐ போலீஸார் ஜனார்த்தன ரெட்டி மீது 8 வழக்குகளை தொடந்தனர்.

கடந்த‌ 2011-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம்தேதி ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். கடந்த 40 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு படிப்படியாக வழக்குகளில் ஜாமீன் கிடைத்தது. கடைசியாக ஓபுலாபுரம் சுரங்க ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

பாலாபிஷேகம்

ஜனார்த்தன ரெட்டி நேற்று மாலை 4.45 மணிக்கு வெளியே வந்தார். அவரை பெல்லாரி பாஜக எம்.பி.ராமலு, பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஷாந்தா, நாகேந்திரா உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனார்த்தன ரெட்டி விடுதலை ஆனதால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவரது ஆதரவாளர்களும் பாஜக தொண்டர்களும் ஜனார்த்தன ரெட்டியை வரவேற்கும் வகையில் பேனர்களை வைத்திருந்தனர்.

பெல்லாரியில் ஜனார்த்தன ரெட்டியின் கட்-அவுட்களுக்கு தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதேபோல கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

SCROLL FOR NEXT