இந்தியா

சாரதா சிட்பண்ட் முறைகேடு: மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ராவுக்கு 30-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்குவங்க அமைச்சர் மதன் மித்ராவை ஜன. 30 வரை காவலில் வைக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாரதா சிட்பண்ட் முறைகேடு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.

அவரது காவல் நிறைவடைந் ததைத் தொடர்ந்து நேற்று அவர் அலிப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 30-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் மதன் மித்ரா கூறியதாவது: மத்திய அரசு பழிவாங்கும் நோக்கத்தில் திரிணமூல் தலைவர்களை கைது செய்து வருகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை யாராலும் அழிக்க முடியாது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு மம்தா பானர்ஜிதான் முதல்வராக நீடிப்பார். போங்கான் மக்களவைத் தொகுதி மற்றும் கிருஷ்ணகன்ஞ் சட்டப்பேரவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே சிறையில் உள்ள அமைச்சர் மதன் மித்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிறையில் இருக்கும் அமைச்சர் எவ்வாறு அமைச்சகப் பணிகளை கவனிப்பார், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT