பாஜக-வின் டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியை இழிவுபடுத்தும் விதமாக ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஷ்வாஸ் பேசியதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக தலைவர்களும் தேர்தல் ஆணையத்தை அணுகி புகார் பதிவு செய்துள்ளனர்.
3 நாட்களுக்கு முன்பாக புதன்கிழமை முண்ட்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் குமார் விஷ்வாஸ், கிரண் பேடியின் பெண்மையை இழிவு படுத்தியதாக புகார் எழுப்பப்பட்டது. இதனை பாஜக நிரூபிக்க முடியுமா என்று குமார் விஷ்வாஸ் சவால் விடுத்துள்ளார்.
பாஜக-வில் கிரண் பேடி இணைந்தது முதற்கொண்டே அவரை தாக்கி குமார் விஷ்வாஸ் பேசி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி பற்றிய வீடியோ பதிவில் விஷ்வாஸ் பேசியதாக எழுந்துள்ள விஷயம்: "பாஜக-விற்கு அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து 2 பிரச்சினைகளே உள்ளன. ஒன்று, அவர் மஃப்ளர் அணிகிறார் என்பது...உங்களிடமிருந்து பறித்து அவர் மஃப்ளர் அணிகிறாரா? இன்னொரு பிரச்சினையாக அவர்கள் கூறுவது, அவர் (கேஜ்ரிவால்) நிறைய இருமுகிறார் என்பது.. உங்கள் பிரச்சினை என்ன? அவருடன் படுக்கை அறையில் உறங்கப்போகிறீர்களா என்ன?”
இவ்வாறு பேசியதாக அந்த வீடியோவில் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கு கிரண் பேடி தனது ட்விட்டரில், “இவ்வாறு பெண்களை இழிவு படுத்தும் மனோநிலையையும், வெளிப்படையாக பெண்மையைக் கொச்சைப்படுத்தும் ஆம் ஆத்மி தலைமையிடமிருந்து என்ன விதமான பாதுகாப்பை பெண்கள் எதிர்பார்க்க முடியும். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் தன் கட்சித் தலைமையின் முன்னிலையில் இவ்வாறு இழிவாகப் பேசியுள்ளார். இதனை எதிர்த்து போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
இது குறித்து ஆம் ஆத்மி தரப்பில் கூறப்படுவதாவது: "டெல்லியில் உள்ள விவகாரங்களைப் பொறுத்தவரை பாஜக-விடம் விடைகள் இல்லை. எனவேதான் இப்படிப்பட்ட வதந்திகளை அவர்கள் பரப்புகின்றனர், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்கின்றனர். மக்களை திசைதிருப்புகின்றனர். அமித் ஷாவின் கொள்கையை கிரண் பேடி கடைபிடிக்கிறார். பாஜக-வின் ராகுல் காந்தியாகி வருகிறார் கிரண் பேடி. அவரை இவ்வாறாக அவர்கள் மாற்றிவருவதை கிரண் பேடி உணரவில்லை.” என்று கூறப்பட்டுள்ளது.