இந்தியா

திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினர்கள் மேலும் 12 பேர் ராஜினாமா

செய்திப்பிரிவு

திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவர் லீலா சாம்சன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்ததையடுத்து இன்று வாரியத்தின் உறுப்பினர்கள் மேலும் 12 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

"தணிக்கை வாரிய உறுப்பினர்கள், அதிகாரிகள் மத்தியில் ஊழல் மலிந்துவிட்டது. மேலிட அழுத்தமும், தலையீடும் அதிகரித்துவிட்டது அதனால் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என லீலா சாம்சன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) ஐரா பாஸ்கர், எம்.கே.ரெய்னா, பங்கஜ் சர்மா, டி.ஜி.தியாகராஜன், ஷாஜி குமார், அஞ்சும் ராஜபாலி, சுப்ரா குப்தா, நிகில் அல்வா, ராஜீவ் மஸந்த், மமாங் டாய், சேகர் பாபு, பிரபு உள்ளிட்டோர் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கூட்டாக அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், "திரைப்படத் தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சன் ராஜினாமா செய்துவிட்டார். தணிக்கைத் துறை செயல்பாடுகளை சீரமைக்க பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்துவந்தோம். ஆனால், எங்களது தொடர் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கப்படவில்லை. தகவல், ஒலிபரப்பு அமைச்சரை சந்தித்துக்கூட எங்கள் கோரிக்கைகள் ஏதும் ஏற்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீலா சாம்சன் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததும், வாரிய உறுப்பினர்கள் 12 பேர் தங்கள் கூட்டு ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததையும் வைத்து பார்கும்போது, தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் அழுத்தம் காரணமாகவே அனைவரும் பதவி விலகியிருக்கிறார்கள் என கணிக்க முடிகிறது.

தேரா சச்சா தேவா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் சிங் நடிப்பில் உருவாகியுள்ள 'மெசஞ்சர் ஆஃப் காட்' என்ற திரைப்படத்தை வெளியிட திரைப்படத் தணிக்கை முதன்மை தீர்ப்பாயம் (FCAT) அனுமதி அளித்துள்ளதையடுத்து லீலா சாம்சன் மற்றும் வாரிய உறுப்பினர்கள் 12 பேரும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

முன்னதாக வியாழக்கிழமையன்று வாரிய உறுப்பினர்களுக்கு லீலா அனுப்பிய மின்னஞ்சலில், "மெசஞ்சர் ஆஃப் காட் திரைப்படத்திற்கு அனுமதி வழங்கி அரசு நம்மை கேலி செய்துள்ளது. எனவே நீங்கள் அனைவருமே கூட்டாக ராஜினாமா செய்வீர்கள்" என்று நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT