புதுடெல்லி: வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் அல்லது அதை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்க வகை செய்யும் புதிய மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது.
தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்களுக்கும் அதை பாடுவதற்கு தடை ஏற்படுத்துவோருக்கும் தண்டனை வழங்கும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய கீதமான ‘ஜன கண மன’ இசைக்கப்படும் அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படுவதை அல்லது பாடுவதை கட்டாயமாக்கி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
திங்கட்கிழமை (ஜூலை 20) தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.
இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, தேசிய கீதம், தேசியக் கொடி, அரசியலமைப்புச் சட்டம் போன்ற தேசிய சின்னங்கள் வரிசையில் இனி தேசியப் பாடலை அவமதிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக மாறும். தேசியப் பாடலை அவமதிப் போருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை, அபராதம் விதிக்கும் இச்சட்ட திருத்த மசோதா வழிவகை செய்கிறது.
மக்களவையில் அறிமுகம் செய்யப்படவுள்ள பிற மசோதாக்களில், பிறப்பு, இறப்பு பதிவை தாமதமாக செய்வதை தடுக்கும் மசோதாவும் அடங்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தெரிவிக்கப்படும் பிறப்பு மற்றும் இறப்புகளை இனி முதல் வகுப்பு நீதித்துறை நடுவரின் உத்தரவில் பேரில் மட்டுமே பதிவு செய்ய இந்த திருத்தம் வகை செய்யும்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ல் இருந்து 37 ஆக உயர்த்திய அவசர சட்டத்துக்கு ஒப்புதலை பெறுவதற்கான சட்டத்திருத்த மசோதாவும் வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட, சர்ச்சைக் குரிய வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா, உயர் கல்வித் துறை சீரமைக்கும் விக்சித் பாரத் கல்வி நிறுவன மசோதா ஆகியவையும் மக்களவையில் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன.